கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாதா? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை, ஜன.18-
கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாதா? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்
கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
காசோலை
வங்கி பரிவர்த்தனைகளில் காசோலை (செக்) முக்கிய பங்காற்றி வருகிறது.
காசோலை என்பது வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது கணக்கில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ செலுத்தும்படி கோரும் ஆவணம் ஆகும். இது எழுத்துப்பூர்வமான உத்தரவாக கருதப்படுகிறது.
நமது நாட்டில் வங்கிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கி காசோலை தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதில், ”பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இந்த மாதம் முதல் செல்லாது” என்று கூறப்பட்டுள்ளது.
நீலம்-பச்சை மை
இதேபோல, ”நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்டுள்ள காசோலைகள் மட்டுமே செல்லத்தக்கதாக வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கருப்பு மையால் எழுதப்படும் காசோலைகளில் எழுத்துகளை எளிதில் அழித்து, திருத்தம் செய்யும் இடர்பாடுகள் இருக்கிறது. இது சமீபகாலங்களில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
எனவே மோசடிகளை தடுத்து, பாதுகாப்பான பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக காசோலைகளில் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை தனிநபர், வர்த்தகம் மற்றும் அரசால் வழங்கப்படும் காசோலை உள்பட அனைத்து காசோலைகளுக்கும் பொருந்தும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யானது
‘கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகளை நிராகரிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை பலரும் தங்களது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்து வருகின்றனர். இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பக சமூக ஊடக கணக்கு மறுத்துள்ளது.
காசோலைகளில் எழுதும்போது குறிப்பிட்ட கலர் மையை பயன்படுத்துவது தொடர்பாக பரிந்துரை செய்து ரிசர்வ் வங்கி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் காசோலைகளில் கருப்பு மையால் எழுதக்கூடாது என்பது முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.