‘வானத்தின் இளவரசி’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய விமானம் 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை வந்தது

மீனம்பாக்கம், ஜன.25-
‘வானத்தின் இளவரசி’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய விமானம் 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை வந்தது
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு, நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.
‘வானத்தின் இளவரசி‘ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ரக சரக்கு விமானம், சென்னையில் முதல் முறையாக வந்து தரை இறங்கியது.
உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள், விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கியதோடு, சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த விமானம், சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த சரக்கு விமானம் ஒரே நேரத்தில் சுமார் 125 டன் சரக்குகளை கையாளக்கூடியது. இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது.
பயணிகள் விமானங்களாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பேர் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில், தற்போது உலக அளவில் சர்வதேச புகழ்பெற்ற சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு வந்து செல்கின்றன.
இது சர்வதேச சரக்கு விமான போக்குவரத்தில் சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.