தமிழ்நாட்டில் முதன் முறையாக கோவையில் நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை தொடக்கம்

கோவை, ஜன.25-
தமிழ்நாட்டில் முதன் முறையாக கோவையில் நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை தொடக்கம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை தொடங்கப்பட்டது.
நடமாடும் பாஸ்போர்ட் வாகனம்
தமிழ்நாட்டில் முதன் முறையாக கோவையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடமாடும் வாகன பாஸ்போர்ட் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நடமாடும் (மொபைல்) பாஸ்பார்ட் வாகனத்தை இந்திய தலைமை பாஸ்போர்ட் அதிகாரி ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நாட்டின் 444-வது பாஸ்போர்ட் மையம் திருப்பூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை பாஸ்போர்ட் மண்டலத்தில் ஒரு நாளைக்கு 1,060 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் வசதி உள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட் மையம் என்ற இலக்கை வைத்து பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாஸ்போர்ட்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1 கோடியே 30 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்கள், ஊரக பகுதிகளில் வசிப்பவர்கள் பாஸ்போர்ட் பெற வசதியாக நடமாடும் பாஸ்போர்ட் வாகன சேவை கோவையில் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு எளிதாக பாஸ்போர்ட் கிடைக்க செய்வதாகும்.
இந்த நடமாடும் பாஸ்போர்ட் வாகனத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கருவிகள் உதவியுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலிகள் மூலம் பாஸ்போர்ட் குறித்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.