தனுஷ்கோடியில் சுற்றுலா வேன்-கார் மோதல்: சிறுவன் உள்பட 14 பேர் காயம்

ராமேசுவரம், ஜன.17-
தனுஷ்கோடியில் சுற்றுலா வேன்-கார் மோதல்; சிறுவன் உள்பட 14 பேர் காயம்
விபத்து
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே செம்படையார் குளத்தை சேர்ந்தவர் டிரைவர் நந்தகுமார் (வயது 25). ராமேசுவரத்தில் சுற்றுலா வேன் ஒட்டி வரும் இவர் சென்னையில் இருந்து நேற்று ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் 20 பேரை வேனில் ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியை சுற்றி பார்த்துவிட்டு ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேன் கம்பிப்பாடு-எம்.ஆர்.சத்திரம் இடையே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று வேன்மீது மோதியது.
14 பேர் காயம்
இதில் வேனில் பயணம் செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (45) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் யுவராஜ் (34), இவரது மனைவி பவானி, இவர்களது குழந்தை நித்தீஸ்வரன் (5), லாவண்யா (26), தட்சிணாமூர்த்தி (61), ராணி (50), ராமலிங்கம் (60) மற்றும் காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த சந்திரசேகர் (34), அமிர்தம் (54), மன்மதன் (60) காயத்ரி (28) உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனுஷ்கோடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.