இலங்கையில் இருந்து கடத்தல்:மதுரை விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.71 லட்சம் தங்கம் சிக்கியது

விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றிய தங்கத்தை படத்தில் காணலாம்.
மதுரை, ஜன.17
மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.71 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது.
இலங்கை விமானம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து, ஒரு தனியார் விமானம் வந்தது. மேலும், அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள், அந்த விமானத்தில் மதுரைக்கு வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் சந்தேகத்தின் பேரில் விமானத்தின் உள்பகுதியிலும் சோதனை செய்தனர்.
விமான உள்வளாக பகுதியில் உள்ள கழிவறையிலும் சோதனை செய்தபோது, அதில் களிமண் போன்ற பொருள் கிடந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் எடுத்து பார்த்தபோது, அதில் 950 கிராம் எடை கொண்ட தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.71 லட்சத்து 25 ஆயிரத்து 950 என தெரிவித்தனர்.
விசாரணை
இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இலங்கை விமானத்தில் வந்த கடத்தல்காரர்கள், அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து கழிவறையில் தங்கத்தை போட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து, விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்