பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு:தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அரசிதழில் வெளியிடப்பட்டதால் உடனடியாக அமலுக்கு வந்தது

சென்னை, ஜன.24-
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு:தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அரசிதழில் வெளியிடப்பட்டதால் உடனடியாக அமலுக்கு வந்தது
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதால், சட்டம் உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது.
சட்டசபையில் தாக்கல்
உலக மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவில் 146 கோடியே 38 லட்சம் பேர் உள்ளனர். இதில், 70 கோடியே 76 லட்சம் பேர் பெண்கள். இந்த நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதை தடுக்கும் வகையில், கடந்த 2023-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்ற அந்த 2 சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை கடந்த 10-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடைசெய்கின்ற சட்டத்தையும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
கவர்னரிடம் அனுப்பிவைப்பு
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதாவும், தமிழக அரசு கொண்டுவந்த பெண்களுக்கு துன்பம் விளைவிப்பவர்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவும் சட்டசபையில் உறுப்பினர்கள் மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
உடனடியாக, இந்த 2 சட்ட மசோதாக்களும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதில் மத்திய அரசு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க முடியாது.
அதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்முதான் ஒப்புதல் அளிக்க முடியும். எனவே, அந்த சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிவைத்துள்ளார்.
அரசிதழில் வெளியீடு
அதேநேரத்தில், தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தாலே, அதை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும்.
அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உடனடியாக, இந்த சட்ட திருத்தம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. எனவே, பெண்களுக்கு துன்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டுள்ள புதிய தண்டனை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இனி, பெண்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் மீது பதியப்படும் வழக்குகளில் இந்த புதிய சட்டப்பிரிவே பயன்படுத்தப்படும்.