போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் சரமாரி ஏவுகணை தாக்குதல் 72 பேர் பலி

காசா, ஜன.17-
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் சரமாரி ஏவுகணை தாக்குதல் 72 பேர் பலிநீண்ட காலமாக மோதல்போக்கு
இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. எனவே 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
எல்லையில் தஞ்சம்
15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி எல்லை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். எனவே போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பயனாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ள 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். அதேபோல் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த கிராமத்துக்கு செல்ல வகைசெய்யவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
எனவே நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த போர் முடிவுக்கு வரும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் தெரிவித்தார். இதனால் காசாவில் உள்ள சாலைகளில் ஆடிப்பாடி பாலஸ்தீனியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தநிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 72 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. போர் முடிவுக்கு வந்தது என எண்ணி பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.