தென்கொரியாவில் தரை இறங்கியபோது வெடித்து சிதறியது விமானம் தீப்பிடித்து 179 பேர் பலிபறவை மோதியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
சியோல், டிச.30-
தென்கொரியாவில் தரை இறங்கியபோது வெடித்து சிதறியது விமானம் தீப்பிடித்து 179 பேர் பலிபறவை மோதியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியா நாட்டின் முவான் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது.
சுவர் மீது மோதி வெடித்தது
‘ஜெஜு ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 175 பயணிகளும், 2 விமானிகள் உள்பட பணியாளர்கள் 6 பேரும் இருந்தனர்.
இந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு தயாரானது. அப்போது விமானத்தின் ‘லேண்டிங் கியர்’ திடீரென செயல்படாமல் போனது.
இதனையடுத்து விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசியவாறு கொண்டு சென்று விமானத்தை தரையிறக்க, விமானி முடிவு செய்தார். அதன்படி விமானம் ஓடுபாதையில் இறங்கி, அதன் அடிப்பகுதி தரையில் உரசியவாறு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் திடீரென ஓடுபாதையை விட்டு விலகி சென்றது. அதன் பின்னர் விமானம் விமான நிலைய கான்கிரீட் தடுப்பு சுவர் மீது அதிவேகத்தில் மோதியது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இதில் வானுயரத்துக்கு பெரும் தீப்பிழம்பு எழுந்தது.
179 பேர் பலி
இந்த விபத்தால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. விமான நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணிகளை மீட்க ஓடி சென்றனர். ஆனால் அதற்குள் விமானம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் மீட்பு பணி சவாலானது.
விமானத்தில் பற்றிய தீயை அணைக்க 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல ஹெலிகாப்டர்கள் விரைந்தன. 1,500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார், ராணுவ வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்களால் 2 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் இருவரும் விமான பணியாளர்கள் என கூறப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் 2 பேரை தவிர விமானத்தில் இருந்த மற்ற 179 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 85 பேர் பெண்கள், 84 பேர் ஆண்கள், 10 பேரின் பாலினத்தை கண்டறிய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட 179 பேரின் உடல்களில் 88 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானோர் தென்கொரியர்கள் என்றும், 2 பேர் தாய்லாந்து நாட்டினர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கதறி அழுத குடும்பத்தினர்
இதனிடையே விமானத்தில் வந்த பயணிகளை வரவேற்பதற்காக முவான் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
தங்களின் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை அறிந்து கொள்ள சோகத்துடனும், பதற்றத்துடனும் விமான நிலைய ஓய்வறையில் அவர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் விபத்தில் பலியானவர்களின் பெயர்களை வாசித்தனர். பலியானவர்களின் குடும்பத்தினர் அதை கேட்டு கதறி அழுதனர்.
அதே நேரம் விடுபட்ட பெயர்களில் உள்ளவர்களுக்கு என்ன ஆனது என கேட்டு அவர்களது குடும்பத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
மன்னிப்பு கேட்டனர்
இந்த பதற்றத்துக்கிடையே ‘ஜெஜு ஏர்’ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் மூத்த அதிகாரிகள் முவான் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வரிசையாக நின்று தலைவணங்கி, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டனர்.
அதன் பின்னர் பேசிய கிம் இ-பே விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்று கொள்வதாகவும், வழக்கமான சோதனைகளில் விமானத்தில் எந்த பிரச்சினையையும் அடையாளம் காணப்படவில்லை என்றும், விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிய அரசாங்க விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக், விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் விபத்து நடந்த பகுதியை சிறப்பு பேரிடர் மண்டலமாக அறிவித்தார்.
மேலும் அவர், “இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்” என கூறினார்.
பறவை மோதியதால்…
இந்த விபத்து குறித்து பேசிய தென்கொரியா விமான போக்குவரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், “விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக விமானத்தின் மீது பறவை மோதியதாகவும், இது தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி எச்சரிக்கை செய்தியை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே பறவை மோதியதில் விமானத்தின் லேண்டிங் கியர் சேதமடைந்து, அதனால் விபத்து நேரிட்டிருக்கலாம் என தெரிகிறது. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விமான தரவு மற்றும் விமானிகள் அறையின் குரல் பதிவுகள், விபத்துக்கான காரணத்தை அரசு நிபுணர்களால் ஆய்வு செய்வார்கள். அதில் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.
இதனிடையே விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி சென்று கான்கிரீட் சுவர் மீது மோதி வெடித்து சிதறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
போயிங் நிறுவனத்தின் விமானம்
விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘போயிங் 737-800’ ரக விமானம் என்றும், அந்த விமானம் கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம், விபத்தில் பலியான பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும். விபத்து தொடர்பாக ‘ஜெஜு ஏர்’ விமான நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜானை தொடர்ந்து தென்கொரியா
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்கியபோது வெடித்து சிதறியது.
விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 67 பேர் என இருந்த நிலையில் அவர்களில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த கோர விபத்து சோக சுவடுகள் மறைவதற்குள் தென்கொரியாவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தென்கொரியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் மோசமான விமான விபத்தாக பதிவாகி உள்ளது.
தென்கொரியா கடைசியாக கடந்த 1997-ல் ஒரு பெரிய அளவிலான விமான பேரழிவை சந்தித்தது. அப்போது கொரிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் அமெரிக்காவின் குவாம் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த 228 பேரும் கொல்லப்பட்டனர்.