டிரம்பின் அறிவிப்பால் விபரீத விளைவு 8-வது மாதத்திலேயே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள் அமெரிக்க மகப்பேறு ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுக்கிறார்கள்

வாஷிங்டன், ஜன.24-
டிரம்பின் அறிவிப்பால் விபரீத விளைவு 8-வது மாதத்திலேயே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள் அமெரிக்க மகப்பேறு ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுக்கிறார்கள்
குடியுரிமைக்காக பிப்ரவரி 20-ந் தேதிக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள 8 மாத கர்ப்பிணிகள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதற்காக அவர்கள் அங்குள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் இனி பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்படும். இந்த நடைமுறை பிப்ரவரி 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்ற நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி உத்தரவால், பிப்ரவரி 19-ந் தேதி வரை அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு, அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் இருக்காது. 20-ந் தேதிக்கு பின்னர் குடியுரிமை இல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்காது.
பேரதிர்ச்சி
இது அங்கு வாழும் நிரந்தர குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
அமெரிக்காவில் தற்காலிக எச்-1பி மற்றும் எல்1 விசாக்கள் மூலம் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்கிறார்கள்.
அமெரிக்க குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ இல்லாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் அமெரிக்க குடிமகனாக இருக்க மாட்டார்கள் என்பதால் இந்தியர்களுக்கும் இந்த உத்தரவு பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் இந்த உத்தரவுக்கு அந்த நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்ல இந்த உத்தரவுக்கு எதிராக அங்குள்ள 20 மாகாணங்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
விபரீத விளைவு
அதே நேரம் ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு, வேறு வகையான விபரீத விளைவை ஏற்படுத்தியுள்ளது.அதாவது தற்போது கர்ப்பிணியாக உள்ள பலர், தங்களுக்கு பிப்ரவரி 20-ந் தேதிக்கு முன்பே குழந்தை பிறக்க வேண்டும்.
அதற்காக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய வேண்டும் என்று மகப்பேறு ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு பிப்ரவரி 20-ந் தேதிக்கு முன்பு குழந்தை பிறந்தால் அமெரிக்க குடியுரிமைக்கு சிக்கல் வராது என்பதே அதற்கு காரணமாக அவர்கள் கருதுகிறார்கள்.
முன்கூட்டியே பிரசவம்
இதுபற்றி டெக்சாசை சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு டாக்டர் எஸ்.ஜி.முக்காலா கூறுகையில், ஜனாதிபதியின் அறிவிப்பால் பிப்ரவரி 20-ந் தேதிக்கு முன் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று 8 மாத கர்ப்பிணிகள் பலர் சிசேரியன் (அறுவை சிகிச்சை) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆஸ்பத்திரிகளை நாடியுள்ளனர். என்னிடமே 20 தம்பதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மருத்துவ ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.டி.ராமா கூறும்போது, 8, 9-வது மாத கர்ப்பிணிகள் சிலர், தங்களது பிரசவ தேதிக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் வந்து, தனக்கு சிசேரியன் செய்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஆரோக்கியமானது அல்ல என்று கூறினார். இதேபோல் பல டாக்டர்கள் தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர்.