179 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான உண்மை காரணம் என்ன?கருப்புப் பெட்டி சேதம் அடைந்துள்ளதால் தென்கொரிய அதிகாரிகள் திணறல்
சியோல், டிச.31-
179 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான உண்மை காரணம் என்ன?கருப்புப் பெட்டி சேதம் அடைந்துள்ளதால் தென்கொரிய அதிகாரிகள் திணறல்.
விபத்துக்குள்ளான விமானம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு வந்தது. ஜெஜு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 175 பயணிகள் உள்பட 181 பேர் இருந்தனர்.
முவான் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க இருந்த நிலையில், பறவைகள் கூட்டமாக பறந்ததால் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மாற்று ஓடுபாதையில் தரையிறங்கும்படி விமானிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நடுவானில் சுற்றிக்கொண்டு இருந்த அந்த விமானம் மீண்டும் தரை இறங்க முயன்றது.
அப்போது லேண்டிங் கியர் செயல்படாததால், விமான உடல் பாகத்தை உரசியபடி தரை இறக்க விமானி முடிவு செய்து, அதன்படி தரை இறக்கினார். எதிர்பாராத விதமாக ஓடுதளத்தை விட்டு விலகிய அந்த விமானம், அங்கிருந்த கான்கிரீட் சுவர் மீது மோதியது. இதில் விமானம் வெடித்து சிதறியது.
179 பேர் பலி
இந்த கோர விபத்தில் 179 பேர் பலியாகினர். அதேசமயம் விமானத்தின் வால்பகுதியில் தொங்கியதால் 2 பணிப்பெண்கள் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர்கள் சுயநினைவை இழந்து மயங்கினர். எனவே அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
உலகையே உலுக்கிய இந்த விபத்து குறித்து தென்கொரிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பறவை மோதியதால் என்ஜின் செயலிழந்து இருக்கலாம் அல்லது விமானத்தின் அடிப்பகுதியை உரசிக் கொண்டு தரை இறங்கியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
அதிகாரிகள் திணறல்
விமானத்தின் கருப்புப்பெட்டி சேதமடைந்ததால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தென்கொரியா நாட்டின் இடைக்கால அதிபர் சோய் சாங் மோக், விமான விபத்துக்கான உண்மையான காரணம் பற்றி விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.