உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

டாவோஸ், ஜன.24-
உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் உலக தலைவர்கள் வலியுறுத்தினர்.
சமூக வலைத்தளங்கள்
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பருவநிலை விவகாரம், சமூக வலைத்தளங்கள் ஆகியவை பற்றி தலைவர்கள் பேசினர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் பேசியதாவது:-
சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சைபர் தொல்லையும் நடக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மின்னணு சேவைகள் சட்டத்தை வலிமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
செயற்கை நுண்ணறிவு
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசியதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கட்டுப்பாடின்றி விரிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. அதுவும், பருவநிலை பிரச்சினையும் உலகளாவிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ளன.
இந்த சவால்கள், மனித இனத்துக்கு எப்போதும் இல்லாத அபாயங்களாக மாறிவிட்டன. அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கங்களும், தனியார் துறைகளும் ஒருங்கிணைந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆழ்ந்த ஆற்றல்மிக்கது என்பது உண்மைதான். ஆனால் அதை அப்படியே விட்டுவிடுவது ஆபத்தானது. எனவே, சர்வதேச ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மலேசியா, பாலஸ்தீனம்
காங்கோ நாட்டு அதிபர் பெலிக்ஸ் அன்டோய்ன்ட ஷிசேகேடி ஷிலோம்போ, உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடுகள் சரகத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் செயல்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாலஸ்தீன அரசின் வெளியுறவு மந்திரி வர்சன் அகாபெகியன், சிரியா வெளியுறவு மந்திரி ஆசாத் ஹசன் அல்ஷைபானி, ஈரான் துணை அதிபர் ஜாவத் ஜரிப் ஆகியோரும் பேசினர்.