கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்
செம்பட்டு, டிச.30-
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்
சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஓணான் உள்ளிட்ட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் உயிரினங்கள் நகர்வது போன்ற அசைவு தெரிந்தது.
அரியவகை ஆமை குஞ்சுகள்
இதைத்தொடர்ந்து, அந்த பயணியின் உடைமைகளை தனியாக எடுத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் சாக்லேட் டப்பாக்களில் மறைத்து உயிருள்ள 2,447 அரிய வகை ஆமை குஞ்சுகளை எடுத்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பயணியிடம் ஆமை குஞ்சுகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து ஆமை குஞ்சுகளை கைப்பற்றினர். அந்த ஆமை குஞ்சுகள் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படுமா? என்பது முழு விசாரணை முடிந்த பின்னரே தெரியவரும்.