பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும்; முதன்மைக்கல்வி அலுவலர்.
புதுக்கோட்டை ஜூன்.28-
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும். குறு வட்ட விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் ( பொ) கூ.சண்முகம் பேச்சு.
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவட்ட விளையாட்டுப்போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு கூட்டம் இன்று 28-06-2024 ( வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
வந்திருந்த அனைவரையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் ( பொ) கூ.சண்முகம் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது,
2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளை தானாக நடத்த முன்வந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துதலையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். பாடத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல உடற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நான் தலைமையாசிரியராக இருக்கும்போது கூட உடற்கல்விக்கு நான் முக்கியத்துவம் அளித்த காரணத்தால் நான் பணியாற்றிய பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு சென்று வெற்றிகளை பெற்றார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியானதாகும். பள்ளியில் தலைமையாசிரியருக்கு அடுத்து உடற்கல்வி ஆசிரியர்கள் முக்கியமானவர்கள்.
ஏனெனில் பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாட்டிற்கு பொறுப்பானவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாவர்கள். இதனால் காலையில் தலைமையாசிரியருடன் உடற்கல்வி ஆசிரியரும் முன்கூட்டியே பள்ளிக்கு சென்று செயல்படும்போது அப்பள்ளியானது சிறப்பானதாகும். பள்ளிகளில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு அந்தந்த பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமையாசிரியரின் அறிவுரைகளை பின்பற்றி வழிகாட்டுதலினை வழங்கி பள்ளி வளாகத்தூய்மையில் முக்கிய பங்காற்றவேண்டும். பள்ளி ஆண்டாய்வின்போது அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்யும் வகையில் உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டு உடற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் நமது மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற மாணவர்களையும், அதற்கு காரணமான உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துதலையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது அவர்களின் பாதுகாப்பு மிக, மிக முக்கியமானதாகும். குறிப்பாக விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது அவர்களின் பெற்றோரிடம் அவசியம் அழைத்துச்செல்வதற்கான அனுமதி கடிதம் பெறவேண்டும். பெண் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்லும்போது பொறுப்பான பெண் ஆசிரியரை தேர்வு செய்து அனுப்பி வைக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களையும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு அறிவுரை வழங்கப்படும்.புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான குறுவட்ட, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நன்கு திட்டமிட்டு சிறப்பாக நடத்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு புதுக்கோட்டை குறுவட்ட அளவிலான போட்டியினை நடத்த புதுக்கோட்டை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியும், கீரனூர் குறுவட்ட அளவிலான போட்டியினை நடத்த மாத்தூர் சிறப்பு மேல்நிலைப்பள்ளியும், இலுப்பூர் குறுவட்ட அளவிலான போட்டியினை நடத்த கல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியும், திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை நடத்த திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு அறந்தாங்கி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை நடத்த அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், ஆலங்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டியினை நடத்த ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், அரிமளம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை நடத்த கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், ஆவுடையார்கோவில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை நடத்த காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியும், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டியினை நடத்த கோனாப்பட்டு சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ரமேஷ், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) ராஜேந்திரன், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளையராஜா , தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.