பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் அறிவுரை.
புதுக்கோட்டை, மே.4-
பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ேநற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி கூறியதாவது:-
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செயல்படுத்தி வருகிறது.
சீரான குடிநீர்
கோடைகாலம் நிலவி வரும் இந்த காலக்கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன்மூலம் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் நீர் குறைவாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக சென்று சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பரமசிவன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.