காசாவில் அமைதி திரும்புகிறது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் காசாவில் அமைதி திரும்புகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
பாலஸ்தீன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்பாக, காசாவில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் பல ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் உதவிகள் வழங்கி வருகிறது.
அது பல தரப்பினரால் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் நடத்தும் இயக்கமாகப் பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனர்களின் குடியுரிமை மீறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் தங்களது நிலம் மீட்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் அரசின் நிலைப்பாடு பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொதுமக்கள் வாழும் இடங்களில் நிகழ்த்திய தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், மற்றும் பாலஸ்தீன மக்கள் மீதான தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலரின் கடும் கண்டனத்தை பெற்றுள்ளன.
இஸ்ரேல் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் மனித உரிமை விதிமுறைகளை மீறுவதாகவும் பாரபட்சமான தண்டனைகளாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை
அதேநேரம் இந்த கொடூர போரை முடிவுக்கு கொண்டுவர கத்தார் உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இரு தரப்பினரிடமும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
நீண்ட காலமாக நடந்த இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் பயனாக காசாவில் போர் நிறுத்தம் செய்யவும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கவும் நேற்று முன்தினம் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாசும் ஏற்றுக்கொண்டன.
கடைசி நேர சர்ச்சை
ஆனால் கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது எகிப்துடனான காசா எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சர்ச்சை நிலவியது.
எனினும் கத்தார் பிரதமர் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்தார். இதனால் அந்த சர்ச்சைக்கும் தீர்வு காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தம் கைெயழுத்தானது. இதை கத்தார் மற்றும் ஹமாஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். எனினும் இஸ்ரேல் தரப்பில் கருத்து தெரிவிக்கவில்லை.
பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கினால்தான் இது அமலுக்கு வரும். எனினும் இது வருகிற நாட்களில் நடந்துவிடும் என தெரிகிறது.
பணயக்கைதிகள் விடுதலை
இந்த ஒப்பந்தப்படி முதலில் 6 வாரங்கள் போரை நிறுத்தி வைத்து, முழுமையான போர் நிறுத்தத்துக்காக பேச்சுவார்த்தை நடைபெறும்.
இந்த 6 வார காலத்தில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளில் 33 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்.
மேலும் இஸ்ரேலில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்கள் சொந்த கிராமத்துக்கு திரும்ப வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு கத்தார் மற்றும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதன் மூலம் காசாவில் 15 மாதங்களுக்குப்பிறகு அமைதி ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.