புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
புதுக்கோட்டை, ஜூன்.11-
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 6-ந் தேதிக்கு பின் தளர்த்தப்பட்டன.
இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்டவை வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2½ மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தீக்குளிக்க முயன்ற பெண்
பொதுமக்களும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க பலரும் வந்திருந்தனர். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஆலங்குடி தாலுகா மாஞ்சான்விடுதி மழவராயன்பட்டியை சேர்ந்த சாமிகண்ணுவின் மனைவி புஷ்பராணி, தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர், போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
அவர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்ததில் நில அளவை மற்றும் பட்டா மாறுதல் செய்யவிடாமல் சிலர் தடுப்பதாகவும், அரசு அதிகாரிகளை அவர்கள் மிரட்டி வருவதாகவும், அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வீடு கட்ட அனுமதி வழங்க கோரியும் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். அவரது உடலில் போலீசார் தண்ணீர் ஊற்றி, திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பரபரப்பு
மனு கொடுக்க வந்த பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் பலத்த சோதனைக்கு பின் பொதுமக்களை உள்ளே அனுமதித்தனர். இருப்பினும் மண்எண்ணெய் கேனை அவர் எடுத்து வந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது மண்எண்ணெய் பாட்டிலை புதர் பகுதியில் மறைத்து வைத்து விட்டு சென்றதாகவும், தற்போது மனுக்கள் நேரடியாக பெறுகிற நிலையில் மனு கொடுக்க வந்த போது, புதரில் இருந்த அந்த கேனை பயன்படுத்தியதாகவும் போலீசாரிடம் புஷ்பராணி தெரிவித்திருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
295 மனுக்கள்
இதேபோல அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதுக்கோட்டை நகராட்சியின் நிதி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரையிலானதில் மாநகராட்சிக்கான அறிவிப்பை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தனர்.
இதேபோல விராலிமலை கொடும்பாளூரை சேர்ந்த விவசாயி செல்வராசு, கொடும்பாளூர் அரசு ஐ.டி.ஐ. அருகே பூங்கா அமைக்காமல் அமைத்ததாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் மனு கொடுத்தார். அவர் தன்னை காந்தியவாதி என்றும், கையில் தேசிய கொடியுடனும் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் 17-ந் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கப்போவதாக தெரிவித்தார். கூட்டத்தில் மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித்தொகை ரூ.2,55,500-க்கான காசோலைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.