கல்லூரியில் படிக்கும்போதே வேலைவாய்ப்புகளை பெறுவது எப்படி?

தமிழ்நாடு , ஜன.18
கல்லூரியில் படிக்கும்போதே வேலைவாய்ப்புகளை பெறுவது எப்படி?
விளக்குகிறார்: திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ். பீர்பாஷா
புதிய பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். தற்போது, கல்லூரி வாயிலாக நடைபெறும் வேலைவாய்ப்பு நிகழ்வுகள், மாணவர்களுக்கு நேரடியாக வேலைக்கான வாய்ப்புகளைத் தருகின்றன. ஆனால் அதில் வெற்றி பெற மாணவர்கள் சரியான முனைப்பும், முறையான தயாரிப்பும் கொண்டிருக்க வேண்டும்.
ஏன் கல்லூரி வேலைவாய்ப்பு முக்கியம்?
கல்லூரியில் நடைபெறும் ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்கள் மாணவர்களுக்கு நேரடியாகவே வேலைவாய்ப்பு வழங்கக்கூடியது. இம்முறையில், கல்லூரி மூலம் பட்டதாரிகளைத் தேர்வு செய்வது, பல நிறுவனங்களுக்கு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துகிறது. மாணவர்களும் பெரிய நிறுவனங்களில் தங்களை நிலைநிறுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர்.
வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் எப்போது நடைபெறும்?
பொதுவாக, மாணவர்களின் இறுதி ஆண்டு (ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலம்) நடைபெறும். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலகம் இதற்கான அறிவிப்புகளை வெளியிடும். இதனை மாணவர்கள் தவறாமல் கவனிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி பெற கவனம் செலுத்த வேண்டியவை
1. அப்டிடியூட் (Aptitude):
அப்டிடியூட் என்பது ஆராய்ச்சி, சிந்தனை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனை குறிக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தேர்வுகளை அப்டிடியூட் தேர்வுகளால் தொடங்குகின்றன. இதற்கான பயிற்சியை இன்றே தொடங்குதல் முக்கியம்.
2. தொழில்நுட்பத் திறன்:
ஐ.டி., பொறியியல் போன்ற துறைகளில் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியமானது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் கோடிங், பைதான், ஜாவா போன்ற நிரல் மொழிகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
3. மென் திறன்கள் (Soft Skills):
குழு விவாதம், நேர்காணல் போன்ற செயல்முறைகளில் பங்கெடுக்கச் செய்யும் திறன்களை மேம்படுத்துவது முக்கியம். குறிப்பாக குழுச்செயல்பாடு மற்றும் பிரச்சினை தீர்வு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. ரெஸ்யூம் தயாரித்தல்:
வேலைவாய்ப்பிற்கான தேவைகளுக்கு ஏற்ப ஆழமான தகவல்களுடன் ரெஸ்யூம்களை வடிவமைத்தல் மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.