அடுத்த மாதம் 11-ந் தேதி கடைசி நாள்: 979 சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஜன.23-
அடுத்த மாதம் 11-ந் தேதி கடைசி நாள்: 979 சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப்-ஏ, குரூப்-பி ஆகிய சிவில் சர்வீசஸ் பதவிகளில் ஒவ்வொரு ஆண்டும் வரும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெளியிட்டு வருகிறது.
இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வுகளை எழுதுகின்றனர்.
இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை யு.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு உள்ளது.
அதன்படி, சிவில் சர்வீசஸ் பதவிகளில் 979 காலி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி ஆகும்.
விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பித்தவர்களில் தகுதியான விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
மேலும் இதுதொடர்பான விவரங்களை https://upsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.