புதுக்கோட்டை அருகே முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை

புதுக்கோட்டை, ஜன.23-
புதுக்கோட்டை அருகே முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை அருகே முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிசி மூட்டைகள் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே குருகுலையார்பட்டியில் ஒரு குடோனில் பிரபல முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்து உரிமை அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து அந்த குடோனுக்கு திருச்சி இன்ஸ்பெக்டர் முனீஸ் தலைமையிலான போலீசார் நேற்று வந்தனர்.
அங்கு அரிசி மூட்டைகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த நிறுவனத்தின் பெயரிலான சாக்குப்பைகள் குவிந்து கிடந்தன.
இதையடுத்து போலீசார் சோதனையில் பிரபல முன்னணி நிறுவனத்தின் பெயரிலான பையை பயன்படுத்தி அரிசி மூட்டைகளை விற்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றினர். சுமார் 1,500 மூட்டைகளும், ஏராளமான சாக்குப்பைகளும் கைப்பற்றப்பட்டன.
போலியான பைகள் அச்சடிப்பு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவாப் நிறுவனத்தின் பெயரில் போலியாக பைகளை அச்சடித்து, அதில் அரிசியை நிரப்பி பல்வேறு பகுதிகளில் விற்று வந்துள்ளனர்”.
ஆந்திராவில் இருந்து இந்த பைகள், அரிசி மூட்டைகள் வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை விற்பனை செய்து வந்த குருகுலையார்பட்டியை சேர்ந்த வீரசேகரன் என்பவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளோம் என்றனர்.
புகார்தாரர் தரப்பில் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் தெரிவிக்கையில், நாங்கள் விற்று வரும் கடைகளுக்கு சென்று, இவர்கள் அதே பெயரில் உள்ள தங்களுடைய அரிசி மூட்டைகளை வாங்குமாறு கேட்டு வந்துள்ளனர்.
போலியான பெயரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.