ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கு: தஞ்சை ராஹத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனர் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த பொழுது கைது

திருச்சி, ஜன.21-
ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கு: தஞ்சை ராஹத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனர் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த பொழுது கைது
தஞ்சையில் ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவன உரிமையாளரின் மைத்துனரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டிராவல்ஸ் நிறுவனம்
தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராகத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்டுகள் மூலம் பலரிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார்.
ஒரு பஸ்சுக்கு 16 பேரை முதலீடு செய்ய வைத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை பஸ் பராமரிப்பு, டிரைவர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத்தொகையை சரிபங்காக 16 பேருக்கு பிரித்து கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.
ரூ.400 கோடி மோசடி
இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால், முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
பின்னர் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி 2 ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல் சமாளித்து வந்துள்ளார். ஆனால், பஸ்சுக்காக வசூல் செய்த பணத்தில் பஸ்களை வாங்காமல், முதலீடு செய்தவர்களின் பணத்தில் ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்து, பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஓட்டல்கள் என்று சொத்துக்களை அவர் பெயரிலும், அவருடைய உறவினர் பெயரிலும் வாங்கியதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
மேலும் அவர், நிறுவனத்திற்கு சொந்தமான 136 பஸ்களில், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் கடனில் இருப்பதும் தெரியவந்தது. இச்சமயத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமாலுதீன் இறந்துவிட்டார்.
இதையடுத்து முதலீடு செய்தவர்கள் கமாலுதீனின் மனைவி ரெஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரகுமான், ஹாரிஸ் ஆகியோரிடம் தாங்கள் முதலீடு செய்த பணத்தை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் இதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும் அவரை புதைத்துவிட்டோம், தோண்டி எடுத்து பணத்தை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
மேலும் பல்வேறு போராட்டங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தினர்.
6 ஆயிரம் பேர் புகார்
சுமார் 6 ஆயிரம் பேர் கொடுத்த புகாரின் பேரில் ரூ.400 கோடி மோசடி செய்ததாக கமாலுதீனின் மனைவி மற்றும் உறவினர்கள், ராகத் டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் என்று சுமார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாலுதீன் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. மேலும் கமாலுதீனின் மனைவி ரெஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான், சகோதரர் அப்துல்கனி, நிறுவனத்தின் மேனேஜர் நாராயணசுவாமி மற்றும் ஊழியர்கள் உள்பட 7-க்கும் மேற்பட்டோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
மைத்துனர் கைது
அதேநேரம் இந்த வழக்கில் கமாலுதீனின் மைத்துனரான பாபநாசம் அம்மாபேட்டையை சேர்ந்த சுகைல் அகமது (வயது 36) கடந்த 3 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தலைமறைவாக இருந்தார். மேலும் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி சுகைல் அகமது இந்தியா திரும்புவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, கத்தாரில் இருந்து வந்த சுகைல் அகமதுவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் கமாலுதீனின் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றை கைப்பற்றும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.