புதுக்கோட்டையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.
புதுக்கோட்டை, ஆக.30-
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பு தேடும் பெண்களுக்கு ஒசூரில் செயல்பட்டு வரும் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்குகிறது.
அதன்படி புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செய்துள்ளது.
முகாமில் பிளஸ்-2 வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் கல்வித்தகுதி (பட்டப்படிப்பு) இல்லாதவராக இருத்தல் வேண்டும். வேறு எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிந்தவராக இருத்தல் கூடாது. வயது வரம்பு 18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தபின் நம்பிக்கைக்கு உகந்த பாதுகாப்பான சூழலில் வேலைவாய்ப்பும், மாதாந்திர சம்பளமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி ஆகியவை சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த படித்த தகுதியுடைய விருப்பமுள்ள பெண்கள் தங்களது 10, 12-ம் வகுப்பு கல்விச் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு அசல் மற்றும் நகல் சான்றுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாம் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.
இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.