கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் துறைமுகங்களாக தரம் உயர்த்தப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு.

கடற்கரை மாவட்டம்
தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்றாகும். கிழக்கு கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் வரை கடற்கரை பகுதியாகும். சுமார் 32 மீனவ கிராமங்களில் மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடலும், கடல் சார்ந்த தொழிலும் தான் அவர்களது வாழ்வாதாரமாக திகழ்கிறது. நாட்டுப்படகு, விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்அடைந்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மீன்பிடி தொழிலும், அவை சார்ந்தவையும் பிரதானமாக திகழ்கிறது.
விரிவாக்க பணிகள்
நாட்டுப்படகுகளை பொறுத்தவரை மோட்டார் பொருத்திய படகுகள் சுமார் 1,250 எண்ணிக்கையிலும், மோட்டார் பொருத்தாமல் 50 படகுகளும் இயக்கப்படுகிறது. இதேபோல விசைப்படகுகளை பொறுத்தவரை கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து 277 விசைப்படகுகள் வரை உள்ளன.
மீன்பிடி இறங்குதளங்களில் தற்போது விசைப்படகுகளை நிறுத்த வசதியாக தலா ரூ.10 கோடியில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுதவிர தற்போது சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது தலா ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மூலம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளங்கள் தரம் மேம்படும்.
மீன்பிடி துறைமுகங்கள்
இந்த நிலையில் பழமையான இந்த 2 மீன்பிடி இறங்குதளங்களை மீன்பிடி துறைமுகங்களாக தரம் உயர்த்தப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்தப்படும் போது பல்வேறு அடிப்படை வசதிகள் மீனவர்களுக்கு கிடைக்கும். இது தொடர்பாக மீனவ வட்டாரத்தினர் கூறியதாவது:-
மீன்பிடி இறங்குதளம் என்பது விசைப்படகுகளை கரையில் குறிப்பிட்ட அளவு நிறுத்த முடியும். மற்ற படகுகளை கடலில் கயிறுகட்டி நிறுத்தப்படும். கடல் அலையானது மீன்பிடி இறங்குதளம் வரை வரும். மேலும் இயற்கை பேரிடர் காலங்களில் இதையும் தாண்டி உள்ளே வர வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் கஜா புயலின் போது ஏற்பட்ட அலை மற்றும் காற்றில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது.
சோதனை சாவடி
மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்தப்படும் போது மீன்பிடி இறங்குதளத்தில் உள்ள கரைப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் கடலில் உள் கற்களை கொட்டி அலை உள்ளே வராமல் தடுக்கப்படும்.
மேலும் விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வரிசையாக செல்லும். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கரைக்கு வந்துவிட வேண்டும். விசைப்படகுகள் வந்து செல்ல சோதனை சாவடி போன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
தற்போது மீன்பிடி இறங்குதளத்தில் விசைப்படகுகள் சென்று திரும்புவதில் நேர கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்ப பங்க் வசதி ஏற்படுத்தப்படும். மேலும் மீன்கள் விற்பனைக்காக ஏலக்கூடம் மற்றும் மீன்கள் சில்லரை விலையில் விற்க வணிக கடைகளுக்கான கட்டிடங்கள் ஏற்படுத்தலாம்.
மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியும். கூடுதல் விசைப்படகுகள் நிறுத்தி இயக்க முடியும். மீன்பிடி தொழில் மேம்படும். அதனால் மீன்பிடி துறைமுகங்களாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு கூறினர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தை மீன்பிடி துறைமுகமாக மாற்ற ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வுக்கு பின்பு தான் தெரியவரும்” என்றனர்.





