திருச்சி ஓலையூரில் மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி உயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது பரிதாபம்
திருச்சி, டிச.19-
திருச்சி ஓலையூரில் மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி உயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது பரிதாபம்.
ஒப்பந்த ஊழியர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அருணாபட்டியை சேர்ந்தவர் கலாமணி (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதேபோல் மணப்பாறை கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (32).
கலாமணியும், மாணிக்கமும் மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் திருச்சி கே.கே. நகரை அடுத்த ஓலையூர் ரிங்ரோடு பகுதியில் நேற்று உயர் அழுத்த மின்கோபுரத்தில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள மின்கோபுரத்தின் மேலே ஏறி கலாமணியும், மாணிக்கமும் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது திடீரென்று அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில், மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். கலாமணி உடல் கருகி மின்கோபுரத்திலேயே பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உயர்மின் ேகாபுரத்துக்கு வந்த மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெற்றோர்-உறவினர்கள்
மின்கோபுரத்தில் பிணமாக தொங்கிய கலாமணியை திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏணி மூலம் ஏறி கீழே கொண்டு வந்தனர். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த கலாமணி, மாணிக்கம் ஆகியோரது உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் இறந்த சம்பவம் திருச்சி மற்றும் மணப்பாறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சி.ஐ.டி.யூ. மற்றும் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் கூறுகையில், திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரிங் ரோடு அருகில் தனியார் நிறுவனத்திற்காக மின்மாற்றியை மாற்றி அமைப்பதற்காக கே.கே.நகர் மின்வாரிய அதிகாரி வாய்மொழியாக உத்தரவிட்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை 11 ஆயிரம் கிலோ வாட் மின்பாதையில் எவ்வித மின்தடை பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாமல், மின்சாரம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்யாமல் வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கலாமணி மற்றும் மாணிக்கம் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். இந்த சம்பவம் நடந்து 5 மணி நேரம் ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் ஒருவர் கூட உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. இதை கண்டித்தும், இறந்து போனவர்களின் குடும்பத்தினருடன் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதன் பின்னரே இறந்தவர்களின் உடலை பெற்றுக்ெகாள்வோம் என்றார்.