1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ரூ.10 லட்சம்வரை வருமானவரி விலக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு

புதுடெல்லி, ஜன.24-
1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ரூ.10 லட்சம்வரை வருமானவரி விலக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு
பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், ரூ.10 லட்சம்வரை வருமானவரி விலக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல்
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.
வழக்கம்போல், பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, மாத சம்பளக்காரர்கள் தங்களது வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
புதிய 25 சதவீத வரி
அதன்படி, புதிய வருமானவரி திட்டத்தின்கீழ், வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
தற்போது, ரூ.7 லட்சத்து 75 ஆயிரமாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு இருக்கிறது.
மேலும், புதிய வருமானவரி திட்டத்தில், ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 30 சதவீத வருமானவரி விதிக்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25 சதவீதம்வரி என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
2 மாற்றங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும், பட்ஜெட் ஒதுக்கீடு அனுமதித்தால், மேற்கண்ட 2 புதிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.1 லட்சம் கோடி இழப்பு
இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டால், வருமானவரி செலுத்தும் மாத சம்பளக்காரர்களுக்கு நிவாரணமாக அமையும் என்று கருதப்படுகிறது.
புதிய வருமானவரி திட்டத்துக்கு ஆதரவு பெருகும் என்றும் தெரிகிறது.
இந்த சலுகைகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடிவரை கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், வருமானவரி சலுகைகளால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதால், அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.