இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன் தேர்வு
தமிழ்நாடு, ஜன.9-
இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன் தேர்வு
புதிய தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளி துறை செயலாளராகவும் விஞ்ஞானி வி.நாராயணனை இந்திய அரசு நியமித்து உள்ளது.
அவர் சோம்நாத் பதவி காலம் முடியும் ஜனவரி 14-ந்தேதி பதவியேற்கிறார். நாராயணன் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார். நாராயணன் தற்போது வலியமலையில் உள்ள திரவ எரிபொருள் ராக்கெட் மையத்தின் (எல்.பி.எஸ்.சி.) இயக்குனராக பணியாற்றுகிறார்.
தமிழகத்தை சேர்ந்தவர்
ராக்கெட் மற்றும் விண்கல ஆய்வுத் துறையில் 40 ஆண்டு கால அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியான, வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.
அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று, ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 ராக்கெட்டின் சி25 கிரையோஜெனிக் என்ஜின் திட்டத்திற்கான, திட்ட இயக்குனராக இருந்தது. அவரது தலைமையின் கீழான குழு சி25 என்ஜின் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியது.
அவரது பதவிக் காலம் முழுவதும், பல்வேறு இஸ்ரோ பணிகளுக்காக 183 திரவ எரிபொருள் ராக்கெட்டுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா விண்கலம் மற்றும் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-3 பயணங்கள், சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகியவற்றிற்கான ராக்கெட் அமைப்புகளுக்கும் அவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
விருதுகள்
வி.நாராயணன், தனது சிறந்த பணிகளுக்காக ஐ.ஐ.டி. காரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் (ஏ.எஸ்.ஐ) தங்கப் பதக்கம் மற்றும் என்.டி.ஆர்.எப். அமைப்பின் தேசிய வடிவமைப்பு விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.