கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்களுடன் கூடிய பைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது: தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்களுடன் கூடிய பைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது: தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
பாலித்தீன் பைகள் ஒழிப்பு
நிலம் மற்றும் இயற்கையுடன் கூடிய சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகள் (கேரி பேக்குகள்) பயன்பாட்டை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் ஓட்டல் சாம்பார் முதல் காய்கறிகள் வரை இன்னமும் பாலித்தீன் பைகளில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் இவற்றின் பயன்பாட்டை ஒழிப்பதற்கு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அவை பயன்பாட்டிற்கு வந்து விடுகின்றன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கேரி பேக்குகளுக்கு பதிலாக மண்ணில் எளிதாக மக்கும் தன்மை உடைய துணியினால் ஆன அல்லது சோளம் போன்றவற்றினால் தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மஞ்சள் நிற துணி பைகளை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் இயக்கங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு துணி பைகளில் வைத்து அவற்றை வழங்கி வருகின்றன.
சூப்பர் மார்க்கெட் போன்ற அனைத்து விதமான பொருட்கள் விற்பனையகங்களில் இந்த பைகளுக்கு தனியாக விலை நிர்ணயம் செய்து அதற்கான கட்டணத்தையும் விற்பனை செய்யும் பொருட்களுடன் சேர்த்து வசூலித்து விடுகிறார்கள்.
தேசிய நுகர்வோர் ஆணையம்
இதற்கு வாடிக்கையாளர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, தேசிய நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், இப்படி விற்பனை செய்யப்படும் பைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ இருக்கக்கூடாது. இந்த பைகளின் மூலம் அவர்கள் தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்தக்கூடாது.
அதே நேரத்தில் இந்த பைகளில் அதற்கான விலையை மட்டும் தெளிவாக அச்சிட்டு கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்றும், விளம்பரம் இருந்தால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் கூறி உள்ளது.