மும்பை கடலில் பயங்கர விபத்து: படகுகள் மோதி 13 பேர் பலி; சுற்றுலா சென்றபோது சோகம்
மும்பை கடலில் பயங்கர விபத்து: படகுகள் மோதி 13 பேர் பலி; சுற்றுலா சென்றபோது சோகம்
மும்பை கடலில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு மீது கடற்படை ரோந்து படகு ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 13 பேர் பலியானார்கள். 101 பேர் மீட்கப்பட்டனர்.
எலிபெண்டா தீவு
மும்பையில் உள்ள எலிபெண்டா தீவு மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த தீவில் மிகவும் பழமையான குடைவரை கோவில்கள் உள்ளன. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் எலிபெண்டா தீவுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த தீவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ‘கேட்வே ஆப் இந்தியா’வில் இருந்து படகுகள் இயக்கப்படுகின்றன. நேற்று மாலை ‘நீல்கமல்’ என்ற படகு புறப்பட்டு சென்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
குட்டி படகு மோதியது
மாலை 4 மணி அளவில் தீவுக்கு செல்லும் வழியில் இந்த படகு மீது சிறிய ரக படகு ஒன்று அதிவேகமாக வந்து மோதியது. இதில் சேதமடைந்த சுற்றுலா பயணிகளின் படகு படிப்படியாக மூழ்க தொடங்கியது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். அவர்கள் படகின் மேல் தளத்தில் ஏறி உயிரை காப்பாற்றி கொள்ள முயன்றனர்.
இதற்கிடையே படகு விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்த கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 11 கடற்படை படகுகள் மற்றும் 3 கடலோர காவல்படை படகுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. கடற்படை ஹெலிகாப்டர்களும் விரைந்தன.
அதேபோல மீனவர்களும் மீட்பு பணிக்காக தங்கள் படகுகளில் விரைந்து சென்றனர். அப்போது படகு பாதிக்கும் மேல் மூழ்கி இருந்தது. படகில் பரிதவித்த 101 பேர் மீட்பு படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
13 பேர் பலி
இந்த பரபரப்புக்கு மத்தியில் விபத்தில் சிக்கிய படகு முற்றிலுமாக மூழ்கிவிட்டது. படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்து விட்டதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இவர்களில் 10 பேர் பயணிகள் என்றும், 3 பேர் கடற்படையினர் என்றும் அவர் கூறினார்.
பயணிகள் படகு மீது மோதிய குட்டி படகு கடற்படைக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த படகு என்ஜீன் சோதனையில் ஈடுபட்டபோது அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடுக்கடலில் எமனாக வந்த அந்த குட்டி படகு மோதும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மும்பை கடலில் படகுகள் மோதிய பயங்கர விபத்து சுற்றுலா பயணிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோ