உலக செஸ் சாம்பியன் குகேசுக்கு நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சென் – இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பாராட்டு
சிங்கப்பூர், டிச.14-
உலக செஸ் சாம்பியன் குகேசுக்கு நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சென் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குகேசுக்கு ரூ.11½ கோடி பரிசு
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14-வது சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
நேற்று முன்தினம் முடிந்த இந்த போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவர் ஆர்காடி திவோர்கோவிச் கலந்து கொண்டு குகேசுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். அத்துடன் ரூ.11½ கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
கோப்பையை கையில் ஏந்திய குகேஷ் பேசுகையில், ‘நான் இந்த தருணத்தை பல லட்சம் முறை வாழ்ந்தது போல் உணருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் கண்விழிக்க காரணம் இந்த தருணத்துக்காக தான். எனது வாழ்க்கையில் இதைவிட பெரியது எதுவும் இருக்க முடியாது. எனது இந்த பயணத்தில் பல ஏற்ற, இறக்கங்கள், சவால்கள் இருந்தன. அதை நான் பெரிதாக எண்ணியதில்லை. எப்போதெல்லாம் எந்தவித தீர்வும் காண முடியாத சூழல் இருந்ததோ அப்போது கடவுள் தான் எனக்கு உந்து சக்தியாக இருந்து சரியான பாதையை காட்டினார்’ என்றார்.
கார்ல்சென் பாராட்டு
உலக செஸ் சாம்பியன் குகேசுக்கு நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சென் – இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பாராட்டு 18 வயதில் பட்டம் வென்று சரித்திரம் படைத்த குகேஷ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்த குகேசுக்கு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் வாழ்த்துகள் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சென் கூறுகையில், ‘குகேஷ் செய்தது நம்பமுடியாத சாதனையாகும். முதலில் சென்னையில் நடந்த பிடே சர்க்யூட் போட்டியில் அவர் வெற்றி கண்டார். அதன் பிறகு கேன்டிடேட் செஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வாகை சூடினார். குகேஷ் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிறைய சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. லிரென் கடைசி வரை நம்பிக்கையோடு காணப்பட்டாலும் குகேஷ் அதிரடியாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும். அனேகமாக தற்போது அவர் தரவரிசையில் 2-வது இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் வருங்காலத்தில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார்’ என்றார்.