நெய்னா முகமது படுகொலை: தமிழக அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
புதுக்கோட்டை,ஏப்ரல்.24-
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகம்மதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
அமைதி மாநிலமான தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினம் நைனா முகமது அவர்களின் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். இவர் 22.04.2024 இரவு 11 மணிக்கு மேல் தனது கடையை அடைத்துவிட்டு, மீமிசலிலிருந்து தனது ஊரான கோபாலபட்டினத்திற்கு, ஊரின் முக்கியச் சாலை வழியாக செல்லும்பொழுது, நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட படுகொலையாகத் தெரிகிறது.
இந்த செயல் இப்பகுதி மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமதுவிற்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவரின் குடும்பத்தினர் கடுமையான மன அழுத்தத்திலும், ஆதரவற்றும் நிற்கின்றனர்.
நைனா முகம்மதின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் அவரை படுகொலை செய்த குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், நீதியை தாமதம் இன்றி பெற்றுத் தருமாறும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறினார்.