கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

பட்டுக்கோட்டை, ஜன.17-
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு.
மீட்டர் கேஜ்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தஞ்சாவூர் டிஸ்டிரிக்ட் போர்டு நிர்வாகத்தினர், சவுத் இந்தியன் ரெயில்வே கம்பெனி மூலமாக 1890-ம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். முதல் கட்டமாக மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டு 2.4.1894-ல் பயணிகள் உபயோகத்திற்காக திறக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை-பட்டுக்கோட்டை ரெயில் பாதை 20.10.1902 அன்றும், பட்டுக்கோட்டை- அறந்தாங்கி ரெயில் பாதை 31.12.1903 அன்றும் திறக்கப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.
மயிலாடுதுறை- காரைக்குடி பாதை
அறந்தாங்கி- காரைக்குடி இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டு 29.3.1952 முதல் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில் பாதை மயிலாடுதுறை-முத்துப்பேட்டை ரெயில் பாதை எனவும் பின்னர் மயிலாடுதுறை- அறந்தாங்கி ரெயில் பாதை எனவும் தற்போது மயிலாடுதுறை-காரைக்குடி ரெயில் பாதை என்றும் அழைக்கப்படுகிறது
முதல் கட்டமாக மயிலாடுதுறையில் இருந்து அறந்தாங்கி வரை பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன. 1961-ம் ஆண்டு முதல் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு பாஸ்ட் பாசஞ்சர் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.
போட் மெயில்
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்ட போட் மெயில் ரெயிலில் இருந்து 2 பெட்டிகள் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை-காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சர் ரெயிலில் இணைக்கப்பட்டு இயங்கி வந்தது.
இந்த 2 பெட்டிகள் மூலமாக காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், திருவாரூர் பகுதிகளில் உள்ள ரெயில் பயணிகள் சென்னைக்கு பயணம் செய்து வந்தனர்.
கம்பன் எக்ஸ்பிரஸ்
1980-ம் ஆண்டு சென்னை- ராமேசுவரம் மெயிலில் இருந்து 5 ரெயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மனோரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் முதலாவது எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் 1987-ம் ஆண்டு மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டது.
திருவாரூர் சந்திப்பில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 5 ரெயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டு திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை தொடர்ந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் திருவாரூரிலிருந்து மற்ற ரெயில் பெட்டிகள் நாகூர் வரை சென்று ஆண்டவர் எக்ஸ்பிரஸ் ஆகவும் இயங்கி வந்தன.
ரெயில் நிறுத்தம்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இரவு நேர ரெயிலாக இயங்கியது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி சென்று வந்தது.
2006-ம் ஆண்டு விழுப்புரம்- மயிலாடுதுறை மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றி அமைக்கும் பணிகள் நடந்ததால் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. கடந்த 2018-2019-ல் திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்னரும், டெல்டா மாவட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த கம்பன் ரெயில் இன்னும் இயக்கப்படாமல் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை விரைந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை ரெயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் விவேகானந்தம், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், ஈகா வைத்தியநாதன், ஆத்மநாதன் மற்றும் பயணிகள் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
வர்த்தக மேம்பாட்டுக்கு உதவிய ரெயில்
கம்பன் எக்ஸ்பிரஸ் இயங்கிய காலத்தில் டெல்டா பகுதி மக்கள் தலைநகரான சென்னைக்கு சென்று வருவது எளிதாக இருந்தது. இந்த ரெயிலில் உள்நாட்டு மீன்கள், கடல் மீன்கள், தேங்காய் போன்ற உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பார்சல் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் வர்த்தக மேம்பாட்டுக்கு உதவியாக அருந்தது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கம்பன் ரெயில் 18 ஆண்டுகளாக இந்த பாதையில் இயக்கப் படவில்லை. மீண்டும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். திருவாரூர், முத்துப்பேட்டை, காரைக்குடி ரெயில் பாதையில் முன்பு நின்று சென்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் மீண்டும் இயக்கப்படும் கம்பன் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பதே இந்த பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகளின் கோரிக்கையாகும்.