புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கு முன்னேற்பாடு: 3½ லட்சம் விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் சேர்க்கும் பணி மும்முரம்
புதுக்கோட்டை, ஜன.8-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கு முன்னேற்பாடாக 3½ லட்சம் விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வுகள்
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறுவது குறித்து கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் அறிவிப்புகள் வெளியானது. இதில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைகிறது.
இதேபோல பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வுகளுக்கு முன்பாக செய்முறை தேர்வுகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்களும் தயாராக உள்ளன.
முகப்பு தாள்கள்
அரசு தேர்வு துறையில் வழக்கமாக விடைத்தாள்களை அந்தந்த தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்படும். அங்கு விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் சேர்க்கும் பணி நடைபெறும். அந்த முகப்பு தாள் என்பது தேர்வு எழுதும் மாணவர் அல்லது மாணவியின் பெயர், புகைப்படம், நுழைவுச்சீட்டு எண், பிறந்த தேதி, தேர்வு தேதி, தேர்வு மையம், தேர்வின் பெயர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
இந்த முகப்பு தாளை பள்ளி மையத்தினர் விடைத்தாள்களுடன் சேர்த்து தனியாக வைப்பது வழக்கம். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மைய வகுப்பறையில் வினியோகிப்பது வழக்கம். இந்த நிலையில் விடைத்தாள்களில் முகப்பு தாளை சேர்க்கும் பணியை இந்த ஆண்டு அரசு தேர்வுகள் துறை நேரடியாக கையாள தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் தேர்வு துறையினர் பொதுத்தேர்வு விடைத்தாள்களில் முகப்பு தாளை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
3½ லட்சம் விடைத்தாள்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பள்ளி என 2 மையங்களில் தேர்வு துறை மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான சுமார் 3 லட்சத்து 55 ஆயிரத்து 470 விடைத்தாள்களில் முகப்பு தாள் சேர்க்கும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விடைத்தாளில் முகப்பு தாளை சேர்த்து தையல் எந்திரத்தில் நூல் மூலம் தைத்து சேர்க்கப்படுகிறது. இதில் தேர்வு துறை ஊழியா்கள் மற்றும் தேர்வு மைய பள்ளியை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பள்ளிகளின் ஆசிரியர்களை வரவழைத்து முகப்பு தாள்கள் சேர்க்கப்படுகிறது.
முறைகேட்டை தடுக்க…
இந்த பணிகள் குறித்து பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், “முதலில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் சேர்க்கப்படுகிறது. அதன்பின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் சேர்க்கப்படும்.
இந்த மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடையும். அந்தந்த தேர்வு மைய பள்ளி ஆசிரியர்கள் முகப்பு தாள்களை இணைக்கும் பணிக்கு வருவார்கள். பணி முடிந்ததும் அந்த விடைத்தாள்கள் அவர்களிடம் உரிய பாதுகாப்பாக கொடுக்கப்படும். இதன் மூலம் தேர்வில் விடைத்தாள்களில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க முடியும். அந்தந்த பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விடைத்தாள்கள், முகப்பு தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் ஒதுக்கீடு அடிப்படையில் விடைத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை” என்றனர்.