நாகையில் இருந்து இலங்கைக்கு ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்.
நாகப்பட்டினம், ஆக.11-
நாகையில் இருந்து இலங்கைக்கு சோதனை ஓட்டமாக ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் நேற்று இயக்கப்பட்டது.
நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது.
காலை 7.30 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்ட கப்பல் நண்பகல் 12 மணியளவில் இலங்கையை சென்றடைந்தது.
இந்த பயணிகள் கப்பல் தொடங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பலுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதியுடன் பயணிகள் கப்பல் நிறுத்தப்பட்டது.
இரு நாட்டு பயணிகள் ஏமாற்றம்
பயணிகள் கப்பல் தொடங்கப்பட்டு சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது இருநாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைமுகத்திற்கு கடந்த மே மாதம் 13-ந்தேதி முதல் மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பல் பல்வேறு காரணங்களால் மே 17-ந் தேதிக்கும், 19-ந்தேதிக்கும் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இது முன்பதிவு செய்த பயணிகளை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் இருநாட்டு பயணிகளையும் ஏமாற்றம் அடைய செய்தது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில் முன்கூட்டியே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் சேவை வழங்குவதாக தகவல் வெளியானது.
அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ந் தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. காலை 7.30 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்ட கப்பல் நண்பகல் 12 மணியளவில் இலங்கையை சென்றடைந்தது. இந்த பயணிகள் கப்பல் தொடங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.