கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம் ஆகிய 8 கிராமங்களில் கடற்கரையில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் தயார்; விரைவில் கடலில் அமைக்கப்படுகிறது.

மீன்வளம்
தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதாவது கடலில் மீன்வளம் பெருக பவளப்பாறைகள் அவசியமாகும். இயற்கையிலான பவளப்பாறைகள் இருந்தாலும் போதுமான மீன்வளம் இல்லாமல் குறைகிறது.

இதனால் செயற்கையாக வட்ட, சதுர, முக்கோண வடிவில் சிமெண்டால் பாறை போன்று வடிவமைக்கப்பட்டு, அதனை கடலில் குறிப்பிட்ட தூரத்தில் கொண்டு அமைக்கப்படும். அந்த செயற்கை பவளப்பாறைக்குள் மீன்கள் தங்கி இனப்பெருக்கம் செய்யும்.
மேலும் கடல் தாழைகள், புற்கள் செடிகள் வளரும். இதன் மூலம் கடலில் மீன்வளம் பெருகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் மீன்வளம் குறைந்து வருவதால், அதனை பெருக்க ரூ.9 கோடியில் செயற்கை பவளப்பாறைகள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
5,760 பவளப்பாறைகள்
இதைத்தொடர்ந்து செயற்கை பவளப்பாறைகள் கட்டுமான பணி புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியில் ஒரு இடத்தில் நடைபெற்று வந்தது.
அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். விரைவில் அவை கடலில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், முத்துனேந்தல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், குமரப்பன்வயல், முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் ஆகிய 8 கிராமங்களில் கடற்கரையில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் அமைக்கப்பட உள்ளது.
3 வடிவங்களில் மொத்தம் 5,760 எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை படகில் எடுத்து சென்று கடலில் ஆங்காங்கே அமைக்கப்படும். இதன் மூலம் மீன்கள் அதில் தங்கி இனப்பெருக்கம் அடையும்” என்றனர்.





