திருவப்பூர் ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.41.24 கோடி ஒதுக்கீடு
புதுக்கோட்டை, டிச.12 –
திருவப்பூர் ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.41.24 கோடி ஒதுக்கீடு
திருவப்பூர் ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.41.24 கோடி ஒதுக்கீடு
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.41.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் அப்துல்லா எம்.பி. பதிவு செய்துள்ளார்.
ரெயில்வே மேம்பாலம்
புதுக்கோட்டை நகரில் இருந்து திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் நகரில் உள்ள இரண்டு ரெயில்வே கேட்டை தாண்டித்தான் செல்ல வேண்டும். இதில் ஒன்று திருச்சி செல்லும் வழியில் உள்ள கருவேப்பிள்ளையான் ரெயில்வே கேட், மற்றொன்று திருவப்பூர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட். இந்த இரண்டு ரெயில்வே கேட் வழியாக கனரக வாகனம் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இதில் திருவப்பூர் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதி உள்ளதால் இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ரெயில்வே கேட்டை போடும் போது அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோருக்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல நாட்களாக பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.41.24 கோடி ஒதுக்கீடு
இதைத்தொடர்ந்து மதுரையிலிருந்து ரெயில்வே அலுவலர்கள் வந்து இடத்தை அளவீடு செய்தும் சென்றனர். அதன் பிறகு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்துக்கான நிலம் எடுப்பதற்காக தனியாக ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியது.
இதன்படி, 6,446 சதுர மீட்டர் நிலம் தனியார் பட்டா நிலம் என்றும், 7,953 சதுர மீட்டர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனியார் இடத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலை நிலமெடுப்பு சட்டப்படி கையகப்படுத்த ரூ.41.24 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
இதுகுறித்து அப்துல்லா எம்.பி. தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ரெயில்வே அமைச்சகம் திருவப்பூர் மேம்பாலம் தொடர்பாக அனைத்து நிர்வாக பணிகளையும் முடித்து உள்ளது. மாநில அரசு நிலமெடுப்பிற்கான அரசாணை வெளியிட்டால் டெண்டருக்கான பணிகளை தொடங்கி விடுவதாக எனக்கு அனுப்பிய தகவலை தெரிவித்தேன்.
அதன் தொடர்ச்சியாக முதல்-மந்திரியை சந்தித்த பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் நிலம் எடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. 2022ம் ஆண்டு இது குறித்து முதன் முதலாக நாடாளுமன்றத்தில் பேசினேன். அதன் பிறகு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ரெயில்வே பிங்க் புக்கில் இந்த திட்டம் குறித்து இணைக்கப்பட்டது.
அது துவங்கி ரெயில்வே மந்திரி அலுவலகம், ரெயில்வே வாரியத் தலைவர் அலுவலகம் என எண்ணற்ற தடவை கடிதங்களோடு அலைந்ததில் தற்போது நிர்வாக பணிகள் அனைத்தும் முழுமை பெற்று இருக்கிறது. புதுக்கோட்டை மக்களின் மிக நீண்ட கால கனவு ஒன்று நிறைவேறும் தருவாயில் உள்ளது என்றார்.