புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம்
புதுக்கோட்டை, டிச.18-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வினியோகம்.
வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்றது. இதையொட்டி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், 18 வயது நிறைவடையும் வகையில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்ளவும், நீக்கவும் பணிகள் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். கடந்த மாதங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களிலும் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
45,608 படிவங்கள்
இந்த நிலையில் இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியில் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சோ்க்க மொத்தம் 27 ஆயிரத்து 800 பேரும், திருத்தம் மேற்கொள்ள 11 ஆயிரத்து 479 பேரும் விண்ணப்பித்தனர். மேலும் பெயர் நீக்குவதற்காக 6,314 படிவங்களும் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 45,608 படிவங்கள் பெறப்பட்டன.
இதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை அச்சிடப்பட்டு வரத் தொடங்கியுள்ளது.
அடையாள அட்டை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமீபத்தில் 3,500 அடையாள அட்டைகள் வந்தன. அவை அனைத்தும் அந்தந்த வாக்காளர்களின் முகவரிக்கு தபால் துறையின் மூலம் தபாலில் நேரடியாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இலவசமாக தபாலில் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அச்சிடப்பட்டதும் படிப்படியாக வாக்காளர் அடையாள அட்டை வந்தப்படி உள்ளன. அவை அனைத்தும் வினியோகிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஆனால் தற்போது அந்த முறையில் இல்லாமல் படிவங்கள் சரிபார்க்கப்பட்ட பின், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும், அச்சிடப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என்றனர்.