திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் கல் குவாரிகளில் 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன.23-
திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் கல் குவாரிகளில் 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு
சமூக ஆர்வலர் கொலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர்அலி (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துலையானூர் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் தோண்டப்படுவதாக அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் வந்த போது மினி லாரியை ஏற்றி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த கொலையின் பின்புலத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கண்டனம்
இதையடுத்து மினிலாரியின் உரிமையாளரான திருமயத்தை சேர்ந்த முருகானந்தம் (56), மினி லாரி டிரைவரான ராமநாதபுரத்தை சேர்ந்த காசிநாதன் (45), கல்குவாரி உரிமையாளரான ராசு (54), அவரது மகன் தினேஷ் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மற்றொரு கல்குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்த நிலையில் சமூக ஆர்வலா் ஜகபர் அலி கொலை வழக்கை திருமயம் போலீஸ் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் விசாரிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது நாளாக ஆய்வு
இதற்கிடையில் திருமயம் அருகே புகார் கூறப்பட்ட கல்குவாரிகளில் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வானது நேற்று 2-வது நாளாக தொடா்ந்தது. அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதா? என பார்வையிட்டனர். மேலும் எடுக்கப்பட்ட கனிமங்கள் குறித்து அளவீடு செய்தனர்.
இந்த ஆய்வு நேற்று மதியம் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள் எனக்கூறப்படுகிறது.