மீன்வளத்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு: கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

மீன்வளத்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு: கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
எல்லைப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கை:
கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் சுமார் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுக்கென தனித்தனியான எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விசைப்படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் (நாட்டுப்படகு எல்லைக்குள்) மீன் பிடித்ததாகப் புகார் எழுந்தது.
நாட்டுப்படகு மீனவர்கள் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததோடு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் மற்றும் மானிய டீசல் விநியோகத்தையும் ரத்து செய்துள்ளனர்.
மீனவர்களின் குற்றச்சாட்டு:
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஆவேசமடைந்துள்ளனர். அதிகாரிகளைக் கண்டித்து இன்று முதல் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகையில், “அதிகாரிகள் பாரபட்சமாகச் செயல்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வு காணும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
அதிகாரிகள் தங்களது பிடிவாதத்தைக் கைவிடவில்லை என்றால், எங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்தப் போராட்டத்தால் கோட்டைப்பட்டினம் கடற்கரை மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.





