ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு.

ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு.
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும் வகையில், சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்த சென்னை ஐகோர்ட்டு கொரோனா காலத்தில் வழங்கியதை போல இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டது.
இதன்படி, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெறும் நடைமுறையை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் எத்தனை அனுமதிக்கலாம்? உள்ளிட்டவைகளை முடிவு செய்ய சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
அரசு போக்குவரத்து
இந்தநிலையில், இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். நிபுணர்களின் குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், இறுதி அறிக்கை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் நிபுணர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ”ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம். நிபுணர்கள் குழுக்களுக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 31-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
வால்பாறைக்கும் இ-பாஸ்
அப்போது, ”ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் இப்போது வால்பாறைக்கு அதிகளவில் செல்கின்றனர்” என்று வக்கீல்கள் தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ”ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய வனப்பகுதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள் ஆகும்.
அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இதற்காக வாகனச் சோதனைகளை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.





