நோயாளிகளை “மருத்துவ பயனாளிகள்” என அழைக்க வேண்டும்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.

நோயாளிகளை “மருத்துவ பயனாளிகள்” என அழைக்க வேண்டும்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 197 வட்டார அரசு மருத்துவமனைகள், 58 வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள் உள்ளன.
இதுபோக, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்புற சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோக, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களை ‘நோயாளிகள்’ என்று அழைக்கும் நிலையே காணப்பட்டு வந்தது.
மருத்துவ பயனாளிகள்:
கடந்த ஆகஸ்டு மாதம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடுபவர்களை நோயாளிகள் என்று அழைக்காமல் மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும்.
மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக்கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்து கொள்ளவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை ‘நோயாளிகள்‘ என அழைப்பதற்கு பதிலாக இனி வருங்காலங்களில் ‘மருத்துவப் பயனாளிகள் அல்லது மருத்துவப் பயனாளர்கள்‘ எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





