படியில் நின்று வேடிக்கை பார்த்ததால் விபரீதம்: பாம்பன் பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து கடலில் விழுந்த வங்கி ஊழியர்; பாறையில் ஏறி அமர்ந்து விடிய, விடிய பரிதவிப்பு.

படியில் நின்று வேடிக்கை பார்த்ததால் விபரீதம்: பாம்பன் பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து கடலில் விழுந்த வங்கி ஊழியர்; பாறையில் ஏறி அமர்ந்து விடிய, விடிய பரிதவிப்பு.
ரெயிலில் இருந்து விழுந்தார்
மதுரை பரவை பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 28). இவர் மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் வரதராஜ் சென்றார். பின்னர் அன்று மாலை 6 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில் ஏறினார்.
இந்த ரெயில் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. கடல் அழகை பார்க்கும் ஆர்வத்தில் வரதராஜ் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார்.
அப்போது திடீரென தலை சுற்றி அவர் தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இரவு முழுவதும்
கடல்நீரில் போராடிய அவர், பாலத்தின் தூண் அருகில் உள்ள ஒரு பாறையை பிடித்து, எப்படியோ அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
வரதராஜ் தவறி விழுந்ததை யாரும் பார்க்காததாலும், அந்த வழியாக மீனவர்களின் படகுகள் எதுவும் வராததாலும் அவர் இரவு முழுவதும் கடலுக்கு உள்ளேயே பரிதவித்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அந்த வழியாக மீன்பிடிக்க சிறிய படகுகளில் மீனவர்கள் வந்தனர்.
கடலுக்குள் பாறையில் ஒருவர் அமர்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வரதராஜை மீனவர்கள் மீட்டு, ரெயில் பாலத்தின் மீது ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் ரெயில் பாலம் வழியாகவே நடந்து பாம்பன் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைத்தனர்.
ரெயிலில் இருந்து தவறி கடலில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை.




