மீமிசல் அருகே கிளாரவயல் கிராமத்தில் அரசு நிலம் மீட்பு; வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை.
மீமிசல், மார்ச்.17-
கிளாரவயல் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சி கிளாரவயல் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது. எனவே அருகே உள்ள அரசு நிலத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி கட்டிடம் கட்ட இருக்கும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர். மேலும் இதுதொடர்பாக வெட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார், மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்து அகற்றினர்.
அப்போது வருவாய் துறையினரிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.