கோபாலப்பட்டினம் அரசுப்பள்ளி மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: பள்ளியில் புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கோபாலப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனாலும் இப்பளியின் அடிப்படை தேவைகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.
பள்ளிக்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், மழைக்காலங்களில் மாணவர்கள் சேறும் சகதியுமாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.
இதுமட்டுமின்றி, பள்ளி கட்டடங்களும் மிகவும் சேதமடைந்து காணப்பட்டன. இது குறித்து ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
மாணவிகளின் அதிரடி முடிவு
அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தப் பள்ளியின் மாணவிகள், தங்களின் உரிமையை மீட்கத் தாங்களே களத்தில் இறங்கினர். பள்ளியின் அவலநிலை, சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் சாலை வசதி இல்லாததை விளக்கி மாணவிகள் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
“எங்களுக்குப் படிக்கச் சரியான வசதி வேண்டும், பாதை வேண்டும். இது சரிசெய்யப்படவில்லை என்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அந்த வீடியோவில் மாணவிகள் ஆவேசமாக முழங்கினர்.
உடனடி நடவடிக்கை
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றது. விளைவு, வீடியோ வெளியான அடுத்த நாளிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்தனர். முதற்கட்டமாகப் பாதையைச் சரிசெய்ய ‘கப்பி மண்’ கொட்டப்பட்டு தற்காலிகச் சாலை அமைக்கப்பட்டது.

9 லட்சம் நிதி ஒதுக்கீடு – அடிக்கல் நாட்டு விழா
தற்காலிகத் தீர்வோடு நிறுத்தாமல், நிரந்தர தீர்வாக அந்தப் பள்ளிக்குச் சாலை அமைக்க அறந்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி ராமச்சந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதற்கான புதிய சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று 13.01.26 செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மாணவிகளின் இந்தத் துணிச்சலான முயற்சிக்கும், அதற்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அப்பகுதி மக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இதற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு பள்ளிகல்வி பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர் அ.சாதிக் பாட்சா ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.





