மீனவ கிராம மக்களின் வேலைவாய்ப்புக்காக கட்டுமாவடியில் தொழில்பூங்கா அமைக்க திட்டம்: அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்தனர்.

கட்டுமாவடி, மார்ச்.1-
மீனவ கிராமங்கள்
தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்றாகும். மணமேல்குடி தாலுகா, ஆவுடையார்கோவில் தாலுகாவில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது.
20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீனவ கிராமங்களில் கடலில் மீன்பிடி தொழிலும், அவை சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவ கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதியை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளும் தந்தை வழியில் மீன்பிடி தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர்.
தொழில் பூங்கா
மீனவர்களின் குழந்தைகள் பலர் பள்ளி படிப்பை சரியாக முடிப்பதில்லை. மேலும் பள்ளிக்கு வருகைப்பதிவும் குறைகிறது. இதனால் எதிர்கால நலன் கருதி மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக மாற்று தொழில் வேலைவாய்ப்பு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதேபோல் அறந்தாங்கி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.பலர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர்.
இதனால் உள்ளூரிலே வேலைவாய்ப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கட்டுமாவடியில் தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 176 ஏக்கர் இடம் அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் நிறுவனங்கள்
இந்த பகுதியில் தொழில்பூங்கா அமைவதின் மூலம் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் புதிதாக அமையும்.
இதன்மூலம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி கிடைக்கும். கடற்கரை பகுதியையொட்டி அமைவதால் அவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த திட்டத்தை முன்னெடுத்து வேகமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.