புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்: தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, ஜன.29-
புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்: தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனது. இதில் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. ஆங்காங்கே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதோடு, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
மேலும் கான்கிரீட் தளத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டன.
இதற்கிடையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் பெருமளவு முடிந்தன.
திருச்சி பேருந்துகள்
இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது. அந்த பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மேற்கூரைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
இதையடுத்து தற்காலிக பேருந்து நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. திருச்சி பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இதேபோல திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி இயக்கப்படுகிறது. மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அதே இடத்தில் இருந்து இயங்குகிறது.
மற்ற வழித்தடங்கள் நிறுத்தும் இடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது அந்த பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.