புதுக்கோட்டை மாநகராட்சியில் 2 மண்டல அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு தலா ரூ 3 கோடியில் கட்டிட பணிக்கு திட்டம்

புதுக்கோட்டை, ஜன.13
புதுக்கோட்டை மாநகராட்சியில் 2 மண்டல அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு தலா ரூ.3 கோடியில் கட்டிட பணிக்கு திட்டம்
புதுக்கோட்டை மாநகராட்சியில் 2 மண்டல அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.3 கோடியில் கட்டிட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சியோடு, முள்ளூர், திருக்கட்டளை உள்பட 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியானது. புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன.
இந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வார்டுகளின் எண்ணிக்கை வரையறைக்கு பின் உயர உள்ளது. தற்போது உள்ள 42க்கு பதிலாக ஊராட்சிகளையும் சேர்த்து வார்டுகள் உருவாகும்.
இதில் சுமார் 65 முதல் 70 வார்டுகள் வரை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த வரையறை பணிகள் மேற்கொள்ளும் போது அதன் முடிவு தெரியவரும்.
மண்டல அலுவலகம்
இதற்கிடையில் புதுக்கோட்டை மாநகராட்சியில் 4 மண்டலங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும். அந்த மண்டலங்களின் பெயரும் வார்டு வரையறைக்கு பின் முடிவாகும்.
இந்த நிலையில் புதிதாக அமைய உள்ள 4 மண்டல அலுவலகங்களில் 2 மண்டல அலுவலகங்கள் அமைக்க மாநகராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 41ல் குறிஞ்சி நகரிலும், வார்டு எண் 37ல் பூங்கா நகர் பகுதியிலும் மண்டல அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.
இந்த அலுவலகங்கள் கட்டுவதற்கு கட்டிட பணிகள் தலா ரூ.3 கோடியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் முன்மொழிவுகளை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
அனுமதி கிடைத்ததும் அடுத்தக்கட்டமாக பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இதேபோல மேலும் 2 மண்டல அலுவலகங்கள் அமைய முடிவு செய்யப்படும் என்றனர்.
உதவி ஆணையர்
மண்டல அலுவலகம் என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வார்டுகளை கொண்டு ஒரு மண்டலமாக பிரிக்கப்படும். அந்த மண்டலம் இயங்குவதற்கான அலுவலகம் தான் மண்டல அலுவலகம். அதில் ஒரு உதவி ஆணையர் பதவியின் நிர்வாகத்தில் அந்த அலுவலகம் இயங்கும்.
அந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள், கோரிக்கைகள் தொிவித்தல், வரியினங்கள் செலுத்துதல், சான்றிதழ்கள் பெறுதல் உள்பட மாநகராட்சி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் மக்கள் அலையவேண்டிய அவசியம் இருக்காது.