புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மும்முரம்
புதுக்கோட்டை, டிச.22-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மும்முரம்
அரையாண்டு தேர்வு
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்பினருக்கு ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது.
அந்த வகையில் 2-ம் பருவ பாடத்திட்டத்தில் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அரையாண்டு தோ்வு விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும். அப்போது 3-ம் பருவ பாடத்திட்ட வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அச்சிடப்பட்டு சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
பாடப்புத்தகங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சமீபத்தில் வந்தன. அதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகம் அருகே உள்ள குடோனில் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் குடோனில் இருந்து விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சரக்கு வேன்களில் பண்டல், பண்டல்களாக ஏற்றி அனுப்பப்படுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும்.