5 ஆண்டுகள் சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் தொடக்கம்.
சென்னை, மே.11-
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னை பெருங்குடி வளாகம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சட்டப்பள்ளியில் பி.ஏ. எல்.எல்.பி., பி.பி.ஏ. எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி., பி.சி.ஏ. எல்.எல்.பி. போன்ற 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் உள்ள 624 இடங்களுக்கும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற 22 சட்டக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 43 சட்டப்படிப்புகளுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 667 சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கி இருக்கின்றன.
விண்ணப்பப் பதிவை தமிழ்நாடு டாக்டர் அம்பேதர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.
கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற உள்ளது.பிளஸ்-2 அல்லது அதற்கு தகுதியான தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், இனவாரியான இடஒதுக்கீடு, சிறப்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.