அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தப்பட அரசு பேருந்தை எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.
அறந்தாங்கி, மார்ச்.24-
அறந்தாங்கியில் அரசு பேருந்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பேருந்து திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 67 பேருந்துகள் உள்ளன. ஆனால் பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் 12 பேருந்துகள் பணிமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் திருவாடானை அரசு பேருந்தை மர்ம ஆசாமி எடுத்துச் சென்றான். இதுகுறித்து அறந்தாங்கி அரசு பணிமனை மேலாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விபத்து
இந்தநிலையில், திருட்டுப்போன அரசு பேருந்து இ.சி.ஆர். சாலையில் வட்டானம் அருகே டேங்கர் லாரி மீது விபத்துக்குள்ளாகி நிற்பதாக தகவல் கிடைத்தது.
மேலும் அந்த பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து இருந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரசு பேருந்தை எடுத்துச் சென்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் அந்த அரசு பேருந்தை கைப்பற்றி இராமநாதபுரம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.