புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.17-
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. அடுத்த மாதம் (மே) 15-ந் தேதிக்கு பிறகு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் பலகை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் விதி முறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையானதாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டும்.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் அருணா தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ் வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு ஆகியோர் குழுவில் உறுப்பினராக உள்ளனர்.
ரூ.2 ஆயிரம் அபராதம்
இக்குழுவின் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழில் முதன்மையானதாகவும், பெரிய எழுத்துக்களிலும் இருக்க வேண்டும் எனவும், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும் அடுத்த மாதம் (மே) 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயருடன் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு முரண்பாடுகள் காணப்படும் நேரில் விளக்கம் கேட்டு அறிவிப்பு வழங்கி ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
அதனை தொடா்ந்து கலெக்டர் அருணா மார்த்தாண்டபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இதுகுறித்து புகார் ஏதுவும் இருப்பின் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசுவை செல்போன் எண் 95669 04179, அலுவலக எண் 0431-2311343 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





