ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க கூகுள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க கூகுள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
விக்சித் பாரத் 2047
இந்தியாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
மத்திய அரசாங்கமும் ‘விக்சித் பாரத் 2047’ என்ற பிரசாரத்தை தொடங்கி இந்தியாவை வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உருவாக்கும் நோக்குடன் செயல்படுகிறது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளின் விரிவாக்கத்தை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சகம் சார்பில் பாரத் ஏ.ஐ. சக்தி மாநாடு நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
புதிய ஏ.ஐ. தரவு மையம்
இந்த மாநாட்டில் கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் கலந்து கொண்டார்.
அப்போது இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
இந்த மையம் மூலம், கூகுள் தனது முழுமையான ஏ.ஐ. தொழில்நுட்ப விரிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, நாட்டின் ஏ.ஐ. சார்ந்த மாற்றத்திற்காக பாய்ச்சலை மேற்கொள்ள உதவவுள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த மையத்திற்காக கூகுள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2026-30) ரூ.1.32 லட்சம் கோடி (15 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீடு செய்ய உள்ளது.
இது கூகுள் இதுவரை இந்தியாவில் மேற்கொண்ட முதலீடுகளில் மிகப்பெரியது ஆகும்.
அதிநவீன வசதிகள்
அதிநவீன ஏ.ஐ. கட்டமைப்பு வசதி, 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு அமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் ஆதார மையம் ஆகியவை அமைய உள்ளன.
மேலும் அவை நீட்டிக்கப்பட்ட ஒளிக்கேபிள் வலைப்பின்னல் மூலமாக அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் தேவைகள் நிவர்த்தி செய்து இணைய வேகத்தை கூட்டி நிலைத்தன்மை அடையவும், நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வலுப்படுத்த இந்த தரவு மையம் உதவும்.
மேலும் இந்த தரவு மையம் அமையவதன் மூலமாக நேரடியாக 6 ஆயிரம் பேருக்கும் மொத்தமாக 20 ஆயிரம் பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி நாரா லோகேஷ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
கூகுளின் இந்த முதலீட்டு அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர், “இது ‘விக்சித் பாரத்’ உருவாக்கும் எங்கள் தேசிய நோக்கத்துடன் இணங்குகிறது.
இந்த திட்டம், தொழில்நுட்பத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகக் கொண்டுசெல்லும் ஒரு வலிமையான இயக்கமாக அமையும்.
அதே நேரத்தில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, உலக தொழில்நுட்ப முன்னணியில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தும்” என பதிவிட்டார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் ‘வரலாற்று சிறப்புமிக்க முதலீடு’ என பதிவிட்டுள்ளார்.
